Sunday, June 03, 2012

Bliss!

Floating as if I am non-existent, 
As Light as a feather,
The whole world seem to vanish.
Neither action, nor inaction
Just the heartbeat reminding I’m alive 
Lost in a darkness of unknown depth,
a state of supreme bliss !

Sunday, May 13, 2012

எழுச்சி !

எழுச்சி உதிர்ந்து இன்றோடு 'எண்ணாத' சில வருடங்கள் ...
எந்திர வாழ்வினில் நிறைந்திருக்கும் ஏக்கங்கள் !

நெறிகள் , அறங்கள் இல்லா தன்னல கொள்கை ...
அயலான் அரசாள - பணம் பண்ண உழைப்பு !

மயக்கம், மயக்கம்! மீண்டுமோர் அந்நியச் சிறை ...
ஒழிக, ஒழிக வெறுமை ! - நெஞ்சம் நிமிர்ந்து துணிய ,

எண்ணம் சீர்செய் 'நுண்ணிய எழுச்சி ' கொடு இறைவா..
ஏற்றம் தாங்கி முன்னேற்ற என் திருநாட்டை !

Friday, July 24, 2009

நினைவினில் நீ….


மேகத்திற்கு பின் மறைந்திருக்கும் முழுனிலவோ?
என் மனதில் மறைந்து விளையாடும் உன் முகம்

இரு முறை கண்டோம் இருவரும்...
இரக்கை முளைத்து, களிப்பினில் இருதயம்...
இனித்தது இனித்தது கணம் நீ இருக்கையில் அருகினில்...
இறுதியில் பதிந்தது வெறும் நிழலுரு அறிவினில்!

நாணம் நிமிர்கயில் நிமிர்ந்தது,
நிலவுனை மறைத்தது...
கிறங்கிய நிலையினில் நானும்
நின் எழில்மிகு கரத்தினை காணும்
வியப்பினிலென் மதி இயங்கிட மறுத்தது...

'மறுமுறை வரும் வரும்'
மயங்கிய மனநிலை உரைத்தது...
'மறுமுறை மணவறை அன்றோ!'
மறுநாள் தெளிந்ததும்
குமிறிய மனம் உனை
நினைவிடை உருவி, பதித்திட துடித்தது...
கடைசியில் கிடைத்தது வெறும்
புகைப்படவுருவம்...
இழந்த நினைவிடம் கரைந்த முகம் எனும் மாயை !
அழிந்த நினைவுகள் முழுவதும் நிலவிடம் பணயம்!!

உன் குணம் எனும் நிலை மட்டும்
உள்ளத்துள் பதிவு...
உருவம் உயர்வினில் உறைவது
உணர்ச்சியில் அல்ல!

மேகத்திற்கு பின் மறைந்திருக்கும் நிலவு வெறும் உணர்ச்சி
மேகத்தை மீறி குணமெனும் கதிர்களை வீசும் நீ சூரியன்(யா) என்பதே உண்மை!

Friday, June 06, 2008

என் உயிரை ஊடுருவிய பாரதி வரிகள்

வாழ்க பாரதி!...

மோகத்தைக் கொன்றுவிடு -- அல்லா லென்றன்மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு -- அல்லாலதில் சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு -- அல்லா லென்றன்ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருந்துலகம் -- இங்குள்ளனயாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு -- அல்லாலுயிர்பாரத்தைப் போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு -- அல்லாலிதைச் செத்த உடலாக்கு
இந்தப் பதர்களையே -- நெல்லாமெனஎண்ணி இருப்பேனோ
எந்தப் பொருளிலுமே -- உள்ளேநின்று இயங்கி யிருப்பவளே.

உள்ளம் குளிராதோ -- பொய்யாணவஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ -- அம்மாபக்திக் கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே -- இந்நாய் சிறுவேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே -- அனைத்திலும்மேவி யிருப்பவளே!

Saturday, May 31, 2008

தமிழ்

கடும்பொருள் உடையவர் மதியுடை மதியவ
கழனியிற் கிடந்துழல் எளியனுக்கெளியவ
களம்புகு மறவரின் மனமுறை மணியவ
கரும்பமு தமிழ்மக மொழியொலி கடந்தவ!


Saturday, August 26, 2006

இன்னும் தவம்...இசைக்காக!


"woofer" speaker-ல் பாடல்களை கேட்பதற்காக பக்கத்து வீட்டு ஜன்னலை நோக்கி காதுகளை தீட்டி வைத்து ரசித்த ஒரு காலம் இன்னும் மனதில் பசுமையாக...
இனிய பாடல்களை தேடி பலர் வாசற்படிகளில் தவம்கிடந்து வாங்கிய ஒலிநாடாக்களின் இசை உயிரில் இன்னும் பதிவுசெய்யப்பட்டுக் கிடக்கிறது....

இசை பயில உத்தரவு கிடைக்காததால், கிடைக்கத்தவறிய அறிவை எண்ணும் பொழுது மனதில் ஒரு பாரம்...
தன்னிச்சையான காலத்திலும் இசை நாடி நான் சென்றேன்...இசையோ, நீ நான் சொல்லும் நேரத்தில் தான் வர வேண்டும் என்று என்னை ஏளனம் செய்தது...
நேரமின்மை, 'இரவு அலுவல்' என் விரோதிகள் ஆயின. இன்றோ-
வேற்று கண்டத்தில் நான்...இசையறிவு நாடி இன்னும் என் தேடல்!

உன்னை அடைந்தே தீருவேன் என்று உள்ளத்தில் ஒரு தீ!
இன்னும் தவம் இங்கு....இசைக்காக!

Tuesday, August 08, 2006

கவிஞனின் பார்வை


உனது பார்வையில் மட்டும் உலகம் ஏன் உருண்டையாகத் தெரியவில்லை?
'உலகம் உருண்டையில்லை' என்ற கற்பனையிலிருந்து நீயின்னும் மீளவில்லையா?

Thursday, July 27, 2006

அன்னிய மண்ணில் என் மெளனம்


தோசை, "பண்டிகை பலகாரம்" ஆகி வெகு நாட்கள் ஆகி விட்டது!
ஒவ்வொரு நாளும் "korn flakes" காலையாய் விடியல்...

தூக்கம் இரவில் இல்லை ...கிடைக்கும் நேரத்தில் சுருங்கிக் கொண்டது.
ஏழையின் சொற்ப சம்பளமாய், எங்களுக்கெல்லாம் "இரவினில்" உறக்கம்!

இஸ்திரி பெட்டி தரும் அம்மாவின் நினைவு,
காலை அவசரத்தில் கசங்கிய சட்டையின் காட்சி...

மணி பார்க்கும் போதெல்லாம்,
இந்திய நேரத்தையும் சேர்த்து கணக்கிடுகிறது மூளை

"laptop" வாங்க கனவு கண்டது ஒரு காலம்...
என்னை விட்டு எங்காவது தொலைந்து போ-சொல்ல வைக்கும் வேலை சுமை...

நேற்று முதல் முறையாய் மது அருந்த உந்துதல்
அதனை ஒடுக்கியது அப்பாவின் நம்பிக்கை...

பணம் காணும் மாயையில் மறந்து போன MBA ஆசைகள்,
தொலைதூரக் கல்வியாய் இப்போது வடிவம்.

"Onsite" கொடு என்ற அவசரத்தின் விளைவு,
கணப்பொறியியல் படித்த ஒரு அரசியல்வாதி!

தாயின் குரல் கேட்க "google talk" கில் பல நாட்கள் தவம்....
"webcam" பார்த்து கழிகின்றது காலம்...

அன்னியராய் அனைவரும்...உறவுகளை தொலைத்து விட்டேனோ?
சில நேரத்தில் சந்தேக மெளனம்!!!